புலம்பல்கள் - PULAMBALGAL

Tuesday, April 21, 2009

எடுத்ததில் பிடித்தது

புலிய பாத்து பூனை சூடு போட்டுகிட்ட மாதிரி நானும் இந்த PIT மக்களை பாத்து பொட்டியும் கையுமா அலைஞ்சு எடுத்ததுல ஒன்னு ரெண்டு தேறுச்சு... அதுல ஒரு சில இங்க



Labels:

posted by ACE !! at 9:46 PM 9 comments

Sunday, June 8, 2008

நிலமை கவலைக்கிடம்!!

இந்த படத்துல இருக்கிற மீனும் நானும் ஏறக்குறைய ஒன்னு தான் :( என் நிலவரமும் இப்போ கலவரமாத்தான் இருக்கு. எப்பவுமே கழுத்து மேல கத்தி வச்ச மாதிரி இருக்கு.
இந்தியா வந்து ஜாலியா இருக்கலாம்னு நினைச்சா, அந்த நினைப்புல மண் அள்ளி போட்டுட்டு, ஆபிஸ்ல ஆணி பிடுங்க சொல்லி தலையிலயே ஆணி அடிக்கறாங்க.. நிஜமாவே பிடுங்க தெரியலன்னாலும் கேக்க மாட்றானுங்க.. என்னவோ நான் தெரிஞ்சிகிட்டே பிடுங்க மாட்டேன்னு சொல்ற மாதிரி நினைச்சுகிட்டு கழுத்தறுக்கறாங்க.. சரி பிடுங்கற மாதிரி நடிக்கலாம்னாலும், விடாம கண்டு பிடிச்சுடறானுங்க... என்னத்த தான் பண்றதோ.. என்ன கொடுமை சார் இது :(

Labels: ,

posted by ACE !! at 6:28 PM 13 comments

Tuesday, October 16, 2007

தடங்கலுக்கு வருந்துகிறோம்...

கொடுமை கொடுமைன்னு இந்தியாவுக்கு வந்தா, இங்க ரெண்டு கொடுமை ஜிங்கு ஜிங்குன்னு ஆடுச்சாம். நம்ம நேரம் இப்படி தான் இருக்கு. வந்து 3 மாசத்துக்கு மேல ஆச்சே.. சரி ஒரு பதிவை போட்டு, அட்டெண்டன்ஸ் போடுவோம்னு பாத்தா, யு.எஸ்-ல இருந்து கிளம்பினதுல இருந்தே பிரச்சினை தான்.

L.A-ல சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் கவுண்டர கண்டுபிடிக்கறதே பெரிய பாடா போச்சு.. சென்னை ஏர்போர்டே தேவலாம். பஸ்ல போ, இந்த பில்டிங் போ, அங்க போ, லிப்ட்ல போ, லெப்ட்ல போன்னு ஒரு வழியா கண்டு பிடிச்சு எல்லா ஃபார்மாலிட்டீஸையும் முடிச்சேன்.

கரெக்டா விமானத்துல ஏறப்போகும் போது, உங்க கைப்பெட்டி பெருசா இருக்கு, எங்க கிட்ட குடுங்க, சிங்கப்பூர் வந்து வாங்கிக்குங்கன்னு கேட்ல ஒரு ஃபிகர் சொல்லுச்சேன்னு நம்பி பொட்டிய குடுத்தேன். சிங்கப்பூர் வந்தா பொட்டிய காணோம்.. அங்க இருந்த அக்கா கிட்ட கேட்டா, பொட்டியா என்ன பொட்டின்னு கலாய்க்குது. டேய், அண்ணன் யாரு தெரியும் இல்லன்னு சவுண்ட் விட்டப்புறம் பொட்டிய செக் இன் பண்ணிட்டோம்னு அசால்டா சொல்றாங்க. அடப்பாவிகளான்னு திட்டிகிட்டே வெளியே போய் (பாஸ்போர்ட்லாம் சரண்டர் செஞ்சப்புறம்) பொட்டிய பாத்தா உள்ள இருந்த கேமராவையும், கேம்கார்டரையும் காணோம்.

கேமரா வாங்கி 10 நாள் கூட ஆகல, நம்ம CVR கிட்ட ஆலோசனையெல்லாம் கேட்டு வாங்கினேன். அவர் சொல்லிகுடுத்த பாடத்தை எல்லாம் டெஸ்ட் பண்ணி கொடுமைபடுத்தலாம்னு வாங்கின கேமராவை சுட்டுட்டானுங்க.. படுபாவி பசங்க :( (இந்த கொடுமைய தடுக்க CVR செஞ்ச சதியான்னு தெரியல) இதுல கேமரா போனதைவிட, அதுல எடுத்த வீடியோ / படம் எல்லாம் போச்சு.. சோகத்தை வார்த்தையில வடிக்க முடியல.. கேமரா தொலைஞ்சதுக்கு துக்கம் கொண்டாடறதுலயே 1 மாசம் போயிடுச்சு.

சரி இதுக்கு மேலையும் காலம் கடத்தாம நம்ம கணிணி பொட்டிய ரெடி பண்ணி, நம்ம இணையுலக சகாக்களை எல்லாம் சந்திப்போம்னு, ரிட்சி தெருவுக்கு போய் மதர் போர்ட், ப்ராஸசர், RAM, எல்லாம் வாங்கிட்டு வந்து ஒரு வழியா கணிணியை ரெடி பண்றதுக்கே 1 மாசம் ஆயிடுச்சு. இது பத்தாதுன்னு இணைய இணைப்பு குடுங்கடான்னா, இதோ வரேன், அதோ வரேன்னு, 10 நாள் ஏர்டெல்ல இழுத்தடிச்சுட்டானுங்க.. ஏர்டெல் சர்வீஸ் வாங்கறதுக்குள்ள தொண்டை தண்ணி வத்தி போச்சு.. 6 தடவை போன் பண்ணப்புறம் தான் கனெக்ஷன் குடுத்தாங்க.

அப்பாடா, எல்லாம் செட் ஆயிடுச்சு, இந்த வாரம் பதிவ போட்டுடுவோம்னு நெனைச்சேன், நெனைச்சது தான் தாமதம், எவன் கண்ணு பட்டுதோ தெரியல, கணிணில USB ஸ்லாட் எதுவும் வேலை செய்யல, என் கிட்ட இருக்கற மவுஸ், கீபோர்ட் ரெண்டுமே USB-ல தான் இணைக்கனும். இது என்னடா மதுரைக்கு வந்த சோதனைனு நானும் எனக்கு தெரிஞ்ச வித்தையெல்லாம் காட்டியும் என் கணிணி அசரலை..

நானும் மனம் தளராத விக்கிரமாதித்தனா, கடன் வாங்கியாவது ஒரு பதிவை போடனும்னு, ஒரு ஃபிரண்ட் கிட்டேயிருந்து PS2 கீபோர்ட், மவுஸ் எல்லாம் வாங்கிட்டு வந்தேன். நேரம் நல்லா இல்லைனா, ஒட்டகத்துல மேல உக்காந்தாலும் நாய் கடிக்கும்னு சும்மாவா சொன்னாங்க. சிரைக்க போனவன் பொட்டிய மறந்த மாதிரி, கீபோர்ட் வாங்க போன நான் பை எதுவும் எடுத்துக்காம போயிட்டேன். மொபெட்ல வரும் போது, ஒரு பள்ளத்துல இறங்கி ஏறினப்போ சைட் பொட்டியில இருந்த கீபோர்ட் கீழே விழுந்துடுச்சு. எவனாவது அது மேல வண்டிய ஏத்திட போறானுங்கன்னு அவசர அவசரமா ஓடி ஏற்கனவே அடிபட்ட கால்ல இன்னும் நல்லா அடிபட, கீபோர்ட மட்டும் எடுத்துட்டு வீட்டுக்கு வந்துட்டேன்.

இனிமே சந்தோஷமா பதிவ போட்டு டார்ச்சர் பண்ண்லாம்னு பாத்தா, கீபோர்ட்ல இருந்து ஸ்பேஸ் பாரும், Atl கீயையும் காணோம். :(.. கீழே விழுந்த வேகத்துல எங்கேயோ கழண்டு விழுந்துடுச்சு.. :(

அட போங்கப்பா, ஒரே ஒரு பதிவை போடறதுக்கு இத்தனை தடங்கலா?? என்ன கொடுமை சார் இது.. :(

Labels: ,

posted by ACE !! at 4:55 PM 42 comments

Friday, June 8, 2007

விடை கொடு யு.எஸ் நாடே!!!

இந்த காலம் தான் எத்தனை வேகமா ஓடுது.. இப்போ தான் வீட்ல சொல்லிட்டு ஃபிளைட் ஏறின மாதிரி இருக்கு.. ஆனா இரண்டரை ஆண்டுகள் ஓடினதே தெரியல..

இந்த இரண்டரை வருஷத்துல தான் எத்தனை அனுபவங்கள். நினைச்சு பாத்தா நல்லது, கெட்டது, சண்டைகள், சோகங்கள், சந்தோஷங்கள்னு ஒரு பெரிய அருவியே மனசுல கொட்டுது.

என்னடா, ஒரே ஓவர் பீலிங்க்ஸா இருக்கேன்னு பாக்கறீங்களா?? வேற ஒன்னும் இல்ல, தாயகம் திரும்ப முடிவெடுத்திருக்கேன்.. புது ஆணி, பழைய ஆணின்னு, ஒரே ஆணிக்குவியலுக்கு நடுவுல நெஞ்ச நிமிர்த்தி இத்தனை நாள் தாக்கு பிடிச்சாச்சு.. இதுக்கு மேலேயும், இங்கிருந்தா நம்ம தலைலயே ஆணி அடிச்சிடுவாங்க, அதனால பொட்டிய கட்டலாம்னு முடிவு செஞ்சாச்சு..

ஆகையினால் இதனால் சகலருக்கும் அறிவிப்பது என்னவென்றால், டல்லாஸ் நகரை விட்டு , எத்தனை ஆணிகள் கொடுத்தாலும் சளைக்காம பிடுங்கற, ஒரு மாவீரன்.. அஞ்சா நெஞ்சன்.. (ஹி ஹி.. நான் தானுங்கோ.. ) கூடிய விரைவில் பிரிய போகிறான்.. (ம.சா : இதுக்கு ஒன்னும் குறைச்சல் இல்ல.. ).

இனி யு.எஸ்-ல மழை குறையலாம். யு.எஸ்-ல மழை குறைஞ்சு தண்ணி பஞ்சம் வந்தா சொல்லுங்க.. திரும்பி வந்து மழை பொழிய வச்சிடலாம் :D

இனி சென்னை / புதுவையில் மாதம் மும்மாரி பெய்யும்.. எல்லோரும் குடை / மழைகோட் மறக்காம எடுத்துட்டு போங்க

(நல்லவங்க இருந்தா மழை பெய்யுமாமில்ல :D :D ).

சரி சரி, இத்தோட நிறுத்திடறேன்.. மொக்கைய சொன்னேன்.. ப்ளாக நிறுத்திடுவேன்னு சந்தோஷபடாதீங்க.. அவ்வளவு லேசுல உங்கள விடறதா இல்ல...

இப்போ கிளம்பறேன்.. நெக்ஸ்ட் மீட் பண்றேன்.. வர்ட்டா!!!

BGM:

விடை கொடு யு.எஸ் நாடே!!
வெயில் வருத்தும் டல்லாஸ் நகரே!!
பரிட்டோ கடையே
வெண்டிஸ் பர்கரே
மறுமுறை ஒரு முறை பார்ப்போமா !!!!!!

Labels: ,

posted by ACE !! at 7:19 AM 43 comments

Tuesday, May 22, 2007

சில்லறைகள்..

ரொம்ப நாளா போஸ்டே போடல, என்ன போடறதுன்னும் தெரியல.. எதாவது தேறுதான்னு வலைமேஞ்சிட்டு இருந்தா, நம்ம G3 சில்லறை வாங்கினத பத்தி கோப்ஸ் சொன்னது ஞாபகம் வந்துது.. சில்லறை வாங்கியத கூட போஸ்டரது ரொம்ப நல்ல ஐடியாவா இருக்கே, நமக்கும் நிறையா அனுபவம் இருக்கேன்னு யோசிச்சேன்.. அப்போ தான் ஒருத்தர் ஹெல்மெட்ட பத்தி எழுதியிருந்தாங்க.. அதனால நானும், நான் வாங்கிய சில்லறைகள பத்தி ஒரு மொக்கய போட்டுடலாம்னு செயற்குழு பொதுகுழு எல்லாம் கூட்டி முடிவெடுத்தேன்.. :D

சில்லறை 1:


11ம் வகுப்புல படிக்கும் போது, ஒரு நண்பன் அவங்க அப்பாவோட TVS 50 எடுத்துட்டு வந்திருந்தான்.. ஆர்வகோளாறுல அத நான் ஓட்டரேன்னு வாங்கி ஓட்டினேன். நான் வண்டி ஓட்டரத பத்தி குடுத்த பில்ட்-அப்ப நம்பி கொடுத்திட்டான்.. நம்ம வண்டி ஓட்டுறதே பைனரி ஸ்டைல்ல தான்.. 0, இல்லேனா 50.. நடுவுல 10,20,30 லாம் பழக்கமே இல்ல.. புதுவை ஈஸ்வரன் கோவில் தெரு??ல எதுத்தா போல வந்த காருக்கு வழி விடறேன்னு கட் அடிச்சு கவுந்து விழுந்தோம்.. கால் கை எல்லாம் சிராய்ச்சிட்டு ரத்தக்களரி ஆயிடுச்சு.. நல்ல அடி.. நடக்கவே முடியல... வண்டிக்கு வேற சம டேமேஜ்...

இதெல்லாம் அரசியல்ல சகஜம்டானு எத்தனை சொல்லியும், எனக்கு வண்டி ஓட்ட தெரியலன்னு அந்த பையன் அதுக்கப்புறம் வண்டி கொடுக்கவே மாட்டேன்னு சொல்லிட்டான்.. லூஸு பய.. ..ஒழுங்கா ஓட்ட விட்டுருந்தா இன்னேரம் ஒரு பைக் ரேஸ் வீரனா, அஜித் மாதிரி வர வேண்டிய ஆளு :D:D .. சரி, சரி விடுங்க.. பழைய கதைய பேசி என்ன ஆகப்போகுது..

சில்லறை 2:

இது ரொம்ப சுவாரசியமா இருக்காது.. டைடல் பார்குல இருந்து வந்து மத்திய கைலாஷ்ல சிக்னல் விழறதுக்கு முன்னடி ரைட் அடிக்கனும்னு வேகமா திரும்ப முயற்சி பண்ணேன்.. அவ்வளவு தான் தெரியும்.. ஒரு போலீஸ்கார மாமா பக்கத்துல நின்னு எதோ சொல்லிகிட்டு இருக்கார்.. என்ன நடந்ததுன்னே தெரியல.. கை மணிக்கட்டுல சம் அடி.. இங்கேயும் ரத்தக்களறி ஆயிடுச்சு.. அந்த நல்ல போலிஸ் மாமா, என்னப்பா அடி பட்டுச்சா?? ஆஸ்பத்திரிக்கு போகலாமான்னு ஆட்டோலாம் பிடிச்சிட்டார்.. நம்ம என்னிக்கு வலிச்சுதுன்னு சொல்லியிருக்கோம்.. அதனால, அடி படாத மாதிரியே ஆக்ட் வுட்டுட்டு சிரிச்சிகிட்டே வந்துட்டேன்..

சில்லறை 3:




ஒரு செப்டம்பர் மாத பின்மாலை பொழுது. லேசா மழை பெஞ்சிட்டு இருந்துது.. இந்த மாதிரி ஒரு ரம்மியமான் நேரத்துல, என்னோட வாகனத்துல மெய் மறந்து வந்துட்டு இருந்தேன்.. மழைனால ட்ராஃபிக் வேற கம்மியா தான் இருந்துது.. அந்த சில்லுனு மழைல நனைஞ்சிட்டு வர சுகம் இருக்கே....

சரி விஷயத்துக்கு வருவோம்... இப்படியா பட்ட நேரத்துல, எனக்கு முன்னடி ஒரு பிட்சா ஹ்ட் டெலிவரி ஆள், ஸ்கூட்டர்ல பறந்துட்டு இருந்தான்... (அவங்க ஸ்பீட்லாம் அடிச்சுக்கவே முடியாது.. அதுவும் ஸ்கூட்டர்ல..).. திடீர்னு பாத்தா நெஜமாலுமே பறந்துட்டு இருந்தான்.. என்னனு பாத்தா தலைவரு ரோட்டுக்கு நடுவுல மீடியனுக்காக போட்டிருந்த கல்லு மேலே ஏறி வந்த் வேகத்துல அப்படியே பறந்தார்... என்ன ஒரு கண்கொள்ளா காட்சின்னு நான் அத பாத்துட்டு ரோட்டுல சிந்தி இருந்த ஆயில பாக்கல.. எந்த வீணா போன வெண்ணையோட வண்டில இருந்து வழிஞ்சிருக்கு.. அதுல வண்டியோட முன் சக்கரம் ஏறி அங்கேயே சுத்துது.. :((( அப்புறம் என்ன, அந்த பிட்ஸா காரனுக்கு போட்டியா நானும் பறந்தேன்.. ஒரே வித்தியாசம்.. அவன் ஸ்கூட்டரோட பறந்தான்.. நான் பைக்க விட்டுட்டு பறந்தேன்.. பறந்து தரையில நெஞ்சு பட லேண்ட் ஆனேன்... ஆனாலும் மீசைல மண்ணு ஒட்டல.. சிங்கம்லே ACE :D

விழுந்த வலி ஒரு பக்கம்னா, ஒரு வெண்ணை கூட உதவிக்கு வரல.. நானே கஷ்ட பட்டு எழுந்து, என் வண்டிய தள்ளிட்டு ரோட்டோரம் வந்தா.. ரெண்டு பேர் அட்வைஸ்.. " பாத்து ஓட்டனும்.. கண்ணு மண்ணு தெரியாம ஓட்டினா இப்படி தான்"னு. அன்னிக்கு வலினால ஒன்னும் செய்ய முடியல.. இல்லேன்னா..

சில்லறை 4:

சென்னையில மீடியன் இல்லாத தெருக்கள்ல எழுத படாத சட்டம், எதிர் பக்கம் ஆள் இல்லைனா ராங் சைட்ல எத்தனை வேகமா வேணா வரலாம்.. அதே போல் ரெண்டு பேர் எதிர்க்க எதிர்க்க வந்தா, who blinks first மாதிரி, யார் முதல்ல நகரராங்கன்னு கடைசி நொடி வரைக்கும் போட்டி இருக்கும்.. கடைசில, ரெண்டு பேருமே அவங்கவங்க லெஃப்ட் சைட் கட் அடிச்சு போவாங்க.. இதுல கொஞ்சம் டைமிங் மிஸ் ஆச்சுனா அம்பேல் தான்..

கோடம்பாக்கம் பாலத்துல, இப்படி ஒரு முறை நான் கரைக்டா போயிட்டிருந்தேன்.. கொஞ்ச தூரத்துல, ஒருத்தன் ராங் சைட்ல வந்துட்டு இருந்தான்.. ரெண்டு பேரும் வேகமா தான் வந்தோம்.. அவன் டபுள்ஸ் வேற வந்துட்டு இருந்தான்.. கடைசி நொடி வரைக்கும் யாரும் வழி விடல.. கிட்ட வந்து நான் கரைக்டா கட் அடிச்சேன்.. அந்த dog கட் அடிக்காம நேரே வந்துட்டான்... வண்டி லைட்டா உரசுச்சு.. நான் மீண்டும் ஆஞ்சநேயரா, இந்த முறை பைக்கோட பறந்தேன்.. பாலம் இறக்கத்துல விழுந்ததுல, பைக்கோட ரெண்டு மூணு முறை உருண்டு, தலை ஒரு ரெண்டு தடவயாவது தரைல வேகமா தட்டுச்சு... நல்ல வேளை ஹெல்மெட் போட்டிருந்ததால தப்பிச்சேன்.. (யாருப்பா நாங்க மாட்டிக்கிட்டோம்னு சொல்றது.... )

அதோட, இந்த சேஷ்டைலாம் நிறுத்திகிட்டேன்.. அடுத்தவன் திறமைய நம்பி போனா இப்படி தான், அதனால் என் திறமைய மட்டும் நம்பி பைக் ஓட்டனும்னு முடிவு கட்டியாச்சு...

--------------------------------------------------------

பைக்ல அவ்ளோ தான்.. இன்னும் ரெண்டு சில்லறை கார்ல வாரினேன்.. அது இன்னொரு நாளைக்கு... சரி சரி.. மொக்கை ஸ்டாப் பண்ணிக்கறேன்.. கல்லெல்லாம் கீழ போடுங்க ப்ளீஸ் :D:D:D

டிஸ்கி : ஹார்லி டேவிட்சன் படம்லாம் ஒரு பில்ட் அப்புக்கு தான்.. :D :D.. (ஓட்டி பாக்கனும்னு ஆசை இருக்கு.. ஆனா இளிச்சவாயன் எவனும் சிக்க மாட்றான். :D :D)

Labels: ,

posted by ACE !! at 4:01 AM 62 comments

Saturday, April 28, 2007

வாழ்க்கை உண்பதற்கே!!!

யு.எஸ் ல ஆயிரம் விஷயம் பிடிக்காம இருந்தாலும், ஒரு நல்ல விஷயம், ரெஸ்டாரன்ட்ஸ். இந்தியன், சைனீஸ், மலாய், மெக்ஸிகன், மங்கோலியன், தாய், இட்டாலியன், கொரியன்னு எல்லா தேசத்து உணவும் கிடைக்கும். நம்ம மாதிரி சாப்பாட்டு ராமன்களுக்கு கொண்டாட்டம் தான் :) நான் சென்ற உணவகங்கள் சில
:
1. மங்கோலியன் உணவகம்:

மங்கோலியன் உணவகத்துல, சாப்பிடும் முறையே வித்தியாசமா இருக்கும். இங்க மத்த கோட்டல் மாதிரி ஆர்டர் செஞ்சு சாப்பிட முடியாது. வரிசையா எல்லா வகையான கறி (beef, pork, chicken, sausage, squid, crab, tuna, cat fish, tilapia, shrimp, mussels etc etc), தக்காளி, வெங்காயம், மஷ்ரூம், பாலக் கீரை, உருளை, முள்ளங்கி, முளைகட்டிய கடலை?? (sprouts), கேரட், கோஸ், பிராக்கலி (broccoli), முட்டை எல்லாமே சமைக்காம, பச்சயா வசிருப்பாஙக.. பக்கதுல, மிளகாய் பொடி, இஞ்சி பொடி, மல்லி பொடி.. அந்த பொடி, இந்த பொடின்னு நிறைய பொடி, தக்காளி சாஸ், சில்லி சாஸ் அதுல ஒரு 10 12 வகை வச்சிருப்பாங்க..நாம போய் ஒரு சட்டில (bowl) நமக்கு வேண்டிய கறி, காய் என்ன வேணும்னாலும் எவ்வளவு வேணும்னாலும் எடுத்துக்கலாம். (ஆனா அந்த bowl கொள்ளும் அளவு மட்டும் ).. இந்த உணவை சமைக்கறதுக்கு, பெரிய கல் வச்சிருப்பாங்க.. நம்ம ஊர் தோசை கல் மாதிரி, ஆனா ரொம்ப பெருசு.. அங்க ஒரு 5 - 6 சமயக்காரங்க இருப்பாங்க.. அவங்க கிட்ட உங்க சட்டிய கொடுத்தா, நீங்க கொண்டு வந்தத கல்லுல போட்டு சமைச்சு தருவாங்க.. ஒரு சில இடங்கள்ல, நூடுல்ஸையும் நீங்க சட்டில போட்டு எடுதுட்டு போகனும்.. வேற சில இடஙள்ல ஃபிரைட் ரைஸ் இல்ல டார்டியா (tortilla = நம்ம ஊர் சப்பாத்தி மாதிரி இருக்கும்) தனியா கொடுப்பாங்க..

சமையல் கொஞ்சமாச்சும் தெரிஞ்சிருந்தா பொடியெல்லம் தேவையான அளவு எடுதுக்கலாம்..இல்லேனா அப்படி இப்படி இருக்கும் அட்ஜஸ்ட் பண்ணிக்க வேண்டியது தான் :) இங்க சாப்பாடு நல்லா இல்லைனா, சமையக்காரரை குறை சொல்ல முடியாது :) (படத்துல இருக்கறது மங்கோலியன் கிரில்)

2. ஜப்பானிய உணவகம்:

ஜப்பானிய உணவகத்துல மெயின் மேட்டரே சுஷி (sushi) தாங்க.. சுஷின்னா நம்ம ஆளுங்க எல்லாம் 10 மைல் தூரம் ஓடுவாங்க.. :) :) ஏன்னா அதுல மீன் சமைக்காம வச்சிருப்பாங்க.. ஆமா பச்ச மீனை சாதத்து மேல இல்ல உள்ள வச்சு கொழுக்கட்டை மாதிரி கையால பிடிச்சி வச்சிருப்பாங்க.. :) :)

நமக்கு ரொம்ப பிடிச்ச ஜப்பானிய உணவு நிகிரி - சுஷி (nigiri-sushi) தான். இது என்னன்னா ஒரு சிறு அளவு சாதத்தை வினகர்ல லைட்டா கலந்து நல்லா இருக பிடிசிருப்பங்க.. அந்த சாத கட்டி மேல ஒரு நல்ல 2 - 3 விரல் மொத்ததுக்கு மீன் துண்டை (தோலெல்லாம் நீக்கி, சுத்த படுத்தியது) வச்சி அழுந்த பதிச்சிருப்பாங்க.. (படத்துல இருக்கறது டூனா சுஷி)

இதை அப்படியே சாப்பிடலாம். இல்லைனா, மாங்கா இஞ்சி, வாசாபியோட (wasabi) சேத்தும் சாப்பிடலாம். வாசாபி, நம்ம ஊர் புதினா துவையல் மாதிரி பச்சை கலர்ல இருக்கும்... ஆனா ரொம்ப கார நெடி வரும். அதனால வாசாபி ஒரு சிட்டிகை போட்டு, சோயா சாஸ் (soy sauce) கலந்து கொஞம் தண்ணியா செஞ்சி வச்சிகிட்டு, அதுல நிகிரி சுஷி + மாங்கா இஞ்சி முக்கி சாப்பிட்டா, என்னா டேஸ்டு, என்னா டேஸ்டு.. முடிஞ்சா ட்ரை பண்ணுங்க.. :) :)

நிகிரி சுஷில அல்பகோர் டுனா (albacore tuna), யெல்லோ டெயில் (yellow tail) மீன்கள் நல்லா இருக்கும். சால்மன் பிடிச்சவங்க அதையும் ட்ரை பண்ணலாம் :)

இது தவிர நோரி-மாகி சுஷியும் உண்டு.. இதை பத்தி எனக்கு ரொம்ப தெரியாது.. இதை கடல் பாசில (sea weed = நோரி) சுத்தி வச்சிருப்பாங்க.. கடல் பாசி எனக்கு ரொம்ப பிடிக்காது.. அதனால கடல் பாசி இல்லாத சுஷி தான் சாப்பிடுவேன்.. இந்த மாதிரி ரோல் கடல் பாசி இல்லாமயும் கிடைக்கும். இந்த ரோல் உள்ள மீன் முட்டை, நண்டு எல்லாம் வச்சிருப்பாங்க.. இது கொஞ்சம் இனிப்பா இருந்தாலும் ரொம்ப நல்லா இருக்கும். (படத்துல இருக்கறது சுஷி ரோல்)


3. கொரிய உணவகம்

கொரிய உணவு, ரொம்ப ஹெல்த்தி, ஒரு பவுல் சூப், ஒரு பிடி அரிசி, 1, 2 பதார்த்தங்கள், நம்ம ஊறுகாய் மாதிரி கிம்ச்சி.அவ்வளவு தான் அவங்க உணவே.. ஒரு சில ஐட்டம்லாம் நம்ம ஊர் மக்களால வாய்ல வெக்கவே முடியாது..:) (நம்ம அந்த ஸ்டேஜ்லாம் எப்பவோ தாண்டியாச்சு :) )

இவங்க சூப் ரொம்ப சத்தானது.. ஊர்ல இருக்க பேர் தெரியாத ஐட்டமெல்லாம் போட்டு கொதிக்க வச்சிருப்பாங்க..:) நம்ம ஃபேவரிட் சூப் ஆக்ஸ் போன் சூப் (Ox bone soup) தான்.. என்ன குப்பைய போடுவான்னு நானும் நிறைய பேர் கிட்ட கேட்டேன்.. ஒரு மண்ணும் புரியல.. சரி எதுக்கு இந்த விபரீத விளையாட்டுன்னு சாப்பிடறதோட நிறுத்திக்கிட்டேன்..

பதார்த்தம்னு பாத்தா, எதாவது மரக்கறி, மிருககறி, டோஃபு (tofu) எல்லாம் போட்டு சாப்பிடற அளவுக்கு இருக்கும். இதோட பேரெல்லாம் தெரிஞ்சிக்கலாம்னு பாத்து பல்பு தான் நிறைய வாங்கினேன்.. :(

அடுத்து கிம்சி (kimchi) .. நம்ம ஊர் ஊறுகாய் மாதிரி, ஆனா ருசி ரொம்பவே கேவலமா இருக்கும். :(. எதாவது ஒரு காய்கறி, (முட்டைகோஸ், லெட்யூஸ், முள்ளங்கி, வெள்ளரிக்காய் etc), வினிகர், மிளகாய்தூள், அப்புறம், வாய்ல நுழையாத பேர் கொண்ட இன்ன பிற சமாச்சாரங்களை எல்லாம் ஒரு சட்டியில போட்டு மாசக்கணக்குல விட்டுடுவாங்க.. அது ஃபெர்மென்ட் ஆனதும். நம்ம ஊர் ஊறுகாய் மாதிரி சாப்பாட்டுக்கு சைட் டிஷ் ஆக்கிடுவாங்க..

இந்த சாப்பாட்டோட ஒரு பிடின்னா, ஒரு பிடி தான் சாதம் சாபிடறாங்க.. அதுக்கு சாப்பிடாமலே இருக்கலாம்... :( நமக்கு இந்த ஒரு பிடி சாதம்லாம் கட்டவே கட்டாது.. ஒரு ரெண்டு மூனு நாள் சமாளிக்க முயற்சி பண்ணேன்.. வேலைக்காகல.. அப்புறம் கூச்சபடாம, எல்லா ஐட்டமும் எக்ஸ்ட்ரா கேப்பேன்.. நம்ம ஊர் ரெஸ்டாரன்ட் மாதிரி கடுப்படிக்காம, நம்ம தட்டு எடுதுட்டு போனாலே, சந்தோஷமா எக்ஸ்ட்ரா அள்ளி அள்ளி வப்பாங்க.. பாசக்கார மக்கள் :) :)

டிபிகல் கொரிய உணவகத்துல தரைல உக்காந்து குட்டியா ஒரு டேபில்ல சாப்பிடனும். இதுல ஒரு கொடுமை என்னன்னா, ஆளுக்கு சூப், சாதம் மட்டும் தனியா இருக்கும்.. மீதி எல்லாம் பொதுவா பவுல்ல வச்சிருப்பாங்க.. எல்லாரும் அதுல இருந்தே சாப்பிடனும்.. கொஞ்சம் மெதுவா சாப்பிடற ஆளுங்களுக்கு ஆப்பு தான் :) :)

பக்கத்துல இருக்க படம் சியோலில் இருக்கும் ஒரு ரெஸ்டாரன்டில் எடுத்தது.
-------------------------------------------------------------------------------------

இது தவிர, தாய், இத்தாலியன், மெக்ஸிகன், மலாய், சைனீஸ், பிரேஸிலியன்னு ஏகப்பட்டது இருக்கு. எத்தியோப்பியன் இன்னும் ட்ரை பண்ணல, கூடிய சீக்கிரம் சாப்பிட்டு அத பத்தியும் ஒரு பதிவு போட்டுடலாம்.. :) :)

டிஸ்கி :
1. ஆணிகள் ஜாஸ்தியானதால, இந்த பதிவு டாகுமென்ட்ரி மாதிரி ஆயிடுச்சு..
2.நான் ரொம்ப ஆராய்ச்சிலாம் பண்ணல, சும்மா நான் போன ரெஸ்டாரன்ட்ல கேட்டது பாத்ததுன்னு எழுதி இருக்கேன்.. தப்பு இருந்தா கண்டுக்காதீங்க :)
3. கொரிய படத்த தவிர மீதி எல்லாம் இணையத்துல இருந்து G3 செஞ்சது.. :) :)
posted by ACE !! at 7:53 PM 78 comments

Sunday, April 15, 2007

அழகிலே ஆறு!!!

அழகை பத்தி எழுதுன்னு நம்ம கட்சி தலைவர் கார்த்தி பணித்திருக்காக..., நம்ம பில்லு பரணி எழுதி இருக்காக..., நம்ம டிரீம்ஸ் தம்பி எழுதி இருக்காக..., நம்ம Dr DD எழுதி இருக்காக... நம்ம k4karthi அண்ணாத்த எழுத போறாக...

(டேய் போதுன்டா.. இன்னும் எத்தனை நேரம் தான் காக.. காக..ன்னு இழுப்ப..).. சரி சரி நமக்கு தெரிஞ்ச அழகு இதாங்க..

அம்மா, தமிழ் இது ரெண்டும் ரொம்பவே அழகு.. நிறைய பேர் அழகு தமிழ்ல சொல்லியிருக்காங்க..அவங்கள விட நம்மாள தமிழ்ல அழகா சொல்ல முடியாது. (வேற எந்த மொழில சொல்லுவன்னு கேக்கபிடாது)

1. ஆர்பரிக்கும் அழகு

புதுவையில் இருந்த போதும், சென்னையில் இருந்த போதும், நமக்கு ரொம்ப அழகா தெரிஞ்சது கடல் தாங்க.. மணற்பரப்பு நிறைந்த சென்னை கடற்கரைகள் ஆகட்டும், பாறைகள் நிறைந்த புதுவை கடற்கரை ஆகட்டும், என்ன ஒரு அழகு. முழு நிலவு தினதன்று நள்ளிரவில், சென்னை<-> புதுவை ECRல நிறைய இடங்களில், நிலவின் ஒளியில் கடலை பாத்துகிட்டே இருக்கலாம்.. அவ்வளவு அழகு. அதே போல், புயல் மழையில், சீறி பாயும் அலை கொண்ட கடலும், அழகு தாங்க..


2. கம்பீர அழகு
கம்பீரம்னா என் மனசுக்கு தோணறது, தஞ்சாவூர் பெரிய கோவில் தான். என்ன தான் புத்தகத்துல படிச்சாலும், ஃபோட்டோல பாத்தாலும் நேர்ல பாத்தா தான் அதோட அழகு தெரியும். நேரில் பாத்த போது ஒரு 5 நிமிஷம் வாய பொளந்து நின்னிட்டு இருந்தேன். இவ்வளவு அழகாய், இவ்வளவு பெரிதாய் இவ்வளவு கம்பீரமாய்.. அதுவும் 10 நூற்றாண்டுக்கு முன்னடியே உருவாக்கி இருக்காங்க.. இன்னும் எனக்கு அந்த பிரமிப்பு அடங்கல.. என்ன ஒரு அழகு.

3. இயற்கை அழகு

வயநாடு வட கேரளாவில் இருக்கிற ஒரு மாவட்டம். மலை சார்ந்த பகுதி. கேரளாவே சம அழகு. அதுல இந்த இடம் அழகோ அழகு. நிறைய கூட்டம் இருக்காது. வெள்ளை மனம் கொண்ட கிராமத்து மக்கள்..சுற்றிலும் ஆள் அரவமற்ற காடுகள், நடு நடுவே அருவிகள்..சிற்றோடைகள்னு அட்டகாசமான ஒரு அழகு... இயற்கை விரும்பிகளுக்கு ஒரு வரப்பிரசாதம்..



4. சின்னஞ்சிறு அழகு
குழந்தைகள்னா மனித குழந்தைகள் மட்டுமில்ல, மிருகக் குட்டிகள் கூட அழகு தான். பூனைகுட்டி, நாய்குட்டியெல்லாம், கொள்ளை அழகு தான்.. உருவத்தில் மட்டிமில்ல, செய்கை, விளையாட்டு குறும்பு எல்லாமே அழகு தான்.. இந்த அழகையும் நாள் பூரா பாத்துட்டே இருக்கலாம்

5. என்றும் அழியா அழகு

எந்த வித எதிர்பார்ப்பும் இல்லாம, நல்லதை மட்டுமே நினைக்கற நட்பு, மிகவும் அழகானது. சுக துக்கங்களில் பங்கேற்று, அறிவுரையில் இருந்து, அறுவை ஜோக் வரைக்கும் எதை வேணா பகிர்ந்துக்கலாம். என்றும் நிலைத்திருக்கும் இந்த மாதிரியான நட்பு, என்னிகுமே அழியாத அழகு


6. இல்லாத அழகு

எனக்கு ரொம்ப நாளாவே ஒரு சந்தேகம். தமிழ்நாடோ ரொம்ப சின்னது. அதுல சேரன், சோழன், பாண்டியன், பல்லவன்னு ஒரு நாலன்சு ராஜவம்சம். இவங்க ஒத்துமயா இருக்காம, ஏன் ஒருத்தரோட ஒருத்தர் சண்டை போட்டுகிட்டு இருந்திருக்காங்க.. ஒரு வேளை இவங்க சண்டை போடாம ஒருத்தருக்கொருத்தர் அனுசரிச்சு போயிருந்தா, இன்னேரம், இந்த உலகையே அவர்களின் கீழ் கொண்டு வந்திருக்கலாமோ??

நம் நாட்டை விட சிறியதான, இங்கிலாந்து, இங்கு வந்து நம்மை ஆட்சி புரிந்தார்கள். அதற்கு ஒரு காரணம், நம்பிக்கையும் ஒற்றுமையும் தான். இங்கு வந்த எந்த பிரதிநிதியும், அவன் அரசனை ஏமாற்றவோ, நம்பிக்கை துரோகம் செய்யவோ இல்லை..

இதே நம்மூரில், பல்லவன், வடக்கே படை எடுத்தால், தெற்கே இருந்து பாண்டியன், பல்லவனின் நாட்டை அபகரிக்க முனைகிறான்.. இப்படிபட்ட சூழலில் எப்படி எந்த ஒரு அரசனாலும், survival பத்தி மட்டுமே யோசிக்க் முடியும், dominate செய்யவோ யோசிக்கவோ முடியாது. அதனால தான் நம்ம வேற எந்த நாட்டையும் கைபற்றவில்லையோ??

நம்ம கிட்ட ஒற்றுமை, நம்பிக்கை என்ற அழகுகள் இல்லயோன்னு ஒரு சந்தேகம் தான்....

-----------------------------------------------------------------------
சரி மக்கா, என் மொக்கைய இத்தோட நிறுத்திட்டு, இன்னும் மூனு பேரை பிடிச்சு போடனுமாம். யாருன்னு தேடி பாத்து பிடிச்ச மூனு பேர் இவங்க தான். இவங்க எல்லாம் கொஞ்ச நாளா தான் பழக்கம். அதனால சும்மா விட்டுட முடியுமா??

நீ யாருடா டேக் பண்ணனு, கேள்வி கேக்காம, அருமையா அழகா ஆறு அழக அதிவிரைவில் பதிவிடுங்க.. இல்லேனா, தலைவர் கார்த்தி உங்களை பென்ச் மேல நிக்க வச்சிடுவாரு.. சொல்லிட்டேன்..

மிக சமீபத்தில் உளறிய உள்ளம் கொண்ட mgnithi

மதுரைகாரரான சுப.செந்தில்

ஆடி பாடி பரிசெல்லாம் சுருட்டிய பத்மபிரியா
posted by ACE !! at 3:20 AM 76 comments